மழைக்காலத்தில் எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என ஓய்வுபெற்ற மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.காமராஜ் விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடர் மழை பெய்யும். இந்த காலங்களில் பூமியும் குளிர்ந்து, நாம் பருகும் குடிநீரும் குளிர்ந்து இருக்கும்.
உணவில் கவனம்: இந்த காலத்தில் நாம் உண்ணும் உணவு எளிதில் செரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இளஞ்சூடான உணவையே உட்கொள்ள வேண்டும். முதல்நாள் சமைத்த உணவை உட்கொள்ளக் கூடாது. மழை, பனிக் காலங்களில் பழைய சோறு சாப்பிடக் கூடாது. அதிகபட்சமாக சமைத்த உணவை 6 மணி நேரம் மட்டுமே வைத்திருக்கலாம். அதன் பிறகு அவற்றை சாப்பிட்டால், செரிமானக் கோளாறு, மலக்கட்டு, புளித்த ஏப்பம், வாயுக்கோளாறு, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். வயிற்றில் அரைப் பங்கு உணவும், கால் பங்கு தண்ணீரும், கால் பங்கு காலியாகவும் இருக்க வேண்டும். உணவு சாப்பிடும் முன் கை, கால்களை கழுவி விட்டு தான் சாப்பிட வேண்டும்.
இதெல்லாம் வேண்டாம்: குழந்தைகளுக்கு சாக்லேட், பிஸ்கட், கேக், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், பதப்படுத்தப்பட்டு பாக்கெட்களில் விற்கப்படும் பொருட்களை வாங்கித் தரக்கூடாது. இதனால் சளி, இருமல், காய்ச்சல், பசியின்மை, வயிற்றுப் போக்கு ஏற்படும். சளி, இருமல், மூச்சுத் திணறல், மூக்கடைப்பு இருக்கும்போது வாழைப்பழம், இனிப்புகள், கீரைகளை தவிர்க்க வேண்டும். நோய் பாதிப்புள்ளவர்கள், காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல், ஆஸ்துமா, மூட்டு, இடுப்பு, முதுகு வலி இருப்பவர்கள், 60 வயதைக் கடந்தவர்கள், குழந்தைகள் குளிர்ந்த நீரைத் தவிர்த்து, சுடுநீரில் தான் குளிக்கவேண்டும். தொற்றுகளை அகற்றும் மூலிகை மருந்துகளைக் கொண்டு ஆவி பிடிக்கலாம். தரமற்ற பொருட்களைக் கொண்டு சுகாதாரமற்ற இடங்களில், சுகாதாரமற்ற மனிதர்களால் தயாரிக்கப்படும் எந்த உணவு, தின்பண்டங்கள், துரித உணவுகள் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.
தினம் 2 வேளை கட்டாயம்: தினந்தோறும் காலை, மாலை இருவேளையும் கண்டிப்பாக மலம் கழிக்க வேண்டும். இல்லாவிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்
படும். மழைக்காலங்களில் நாட்டுக் கோழி, வெள்ளாடு கறிகளை உட்கொள்ளலாம். குழந்தைகளுக்கு முட்டை, மீன் வழங்கக் கூடாது.நிலவேம்பு குடிநீர் சூரணத்தை மருத்துவரின் ஆலோசனையுடன் நன்றாக காய்ச்சி பருகி வரலாம் கொசுவத்திச் சுருளை தொடர்ந்து பயன்படுத்தினால் சுவாசக் கோளாறு, தும்மல், மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, மூச்சுத் திணறல், இருதய படபடப்பு ஆகியவை ஏற்படும்.
ஆவி பிடிப்பது எப்படி? - சளி, இருமல், தொண்டை கரகரப்பு, சைனஸ் பிரச்சினை, தலை பாரம், மூக்கடைப்பு இருப்பவர்கள் நொச்சி இலை, வேம்பு இலை, துளசி இலை, ஓமவள்ளி இலைஆகியவை தலா 5, ஏலக்காய், கிராம்பு தலா 2, பச்சை கற்பூரம், ஓமம் தலா 2 கிராம் ஆகியவற்றை எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் தண்ணீர் போட்டு மூடி நன்கு கொதிக்க வைத்து இறக்கி வைத்து மூடியை எடுத்து ஆவி பிடிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- எஸ்.காமராஜ், ஓய்வுபெற்ற மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்
Tags:
உடல் நலம்