Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Saturday, December 2, 2023

குரூப் 4 பணியிடங்களுக்கான கல்வி தகுதியை நிர்ணயம் செய்ய விதிகளில் திருத்தம் - உயர் நீதிமன்றம் உத்தரவு


குரூப் 4 பணியிடங்களுக்கு குறைந்த பட்ச, அதிகபட்ச கல்வித் தகுதி நிர்ணயம் செய்யும் வகையில் விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் காலியாக இருந்த 135 சமையலர் பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டு, கடந்த 2022-ல் நிரப்பப்பட்டன. இதில், அதிக கல்வித் தகுதியுள்ளதாகக் கூறி சிலரும், அதிக வயதுள்ளதாகக் கூறி சிலரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து சிலர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த தனி நீதிபதி அதிக கல்வி தகுதி இருப்பதாகக் கூறி பணி நீக்கம் செய்தது சரியல்ல எனக்கூறி, நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஆதிதிராவிடர் நல ஆணையர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியம், கலைமதி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

குரூப் 4 பணியிடங்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயம் செய்யப்பட வேண்டியது அவசியம். குறைந்தபட்ச கல்வித் தகுதி கொண்டவர்களின் வாய்ப்பு அதிகபட்ச கல்வித் தகுதியுடையோரால் பறிபோகிறது. அதிக தகுதியுடையோரால் நிர்ணயிக்கப்பட்ட பணியை திறம்பட மேற்கொள்ள முடியவில்லை. இதை உயர் நீதிமன்ற நிர்வாகம் கூட எதிர்கொண்டுள்ளது. சமவாய்ப்பை மறுப்பது என்பது அடிப்படை உரிமையை மீறுவதாகும். போட்டித்தேர்வு முறைகளில் குறைந்தபட்ச கல்வித் தகுதியை கொண்டவர்களுக்கான வாய்ப்பு என்பது குறைவே. இவர்களுக்கான பணிகளும் மிக குறைவே. அரசியலமைப்பு சட்டம் எந்தவித பாகுபாடும் இன்றி அனைவருக்குமான வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் அதிக கல்வித் தகுதியுடையோர் 4 வாரங்களுக்குள் மீண்டும் பணியில் சேர அனுமதிக்க வேண்டும். அதேநேரம், தமிழ்நாடு அடிப்படை பணிகள் சிறப்பு விதிகளின்படி அதிக வயதுடையோர் நியமனம் சட்டவிரோதம் என்பதால் சம்பந்தப் பட்டோர் பணியை தொடர முடியாது. குரூப் 4 பணியிடங்களில் மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி மற்றும் அதிகபட்ச கல்வி தகுதியை நிர்ணயம் செய்யத் தேவையான விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் சம வாய்ப்பு என்பதை பாதுகாக்க முடியும், என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.