உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் எப்போது முடியும்? தமிழக தேர்தல் ஆணையம் தந்த முக்கிய விளக்கம்


இந்த ஆண்டு இறுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தான் 2021ல் நடைபெற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே முடிவுக்கு வரும் என்ற தகவலும் பரவி வருகிறது.

இந்நிலையில் தான் அதுபற்றி மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை 6 வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. அதாவது கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்டவை தான் கிராமங்கள், டவுன், நகரங்கள் வாரியாக நிர்வாகங்களை மேற்கொண்டு வருகின்றன.

இதில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகியவை ஊரக உள்ளாட்சி அமைப்புகள் என அழைக்கப்படுகின்றன. அதேவேளையில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்டவை உள்ளன. நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் என கூறப்படுகிறது.

ஊரக உள்ளாட்சி அமைப்பாக இருந்தாலும் சரி, நகர்பற உள்ளாட்சி அமைப்பாக இருந்தாலும் சரி அதில் தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகளின் பதவிக்காலம் என்பது 5 ஆண்டுகளாகும். இதனால் ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒருமுறை ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் என்பது நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் என்பது 2027 ம் ஆண்டு வரை இருக்கிறது. இதில் யாருக்கும் எந்த குழப்பமும் இல்லை.

மாறாக தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் பதவிக்காலம் தொடர்பாக தான் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கடந்த முறை தமிகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வெவ்வேறு காலங்களில் தேர்தல் நடத்தியது தான். அதாவது கடந்த 2019ல் அதிமுக ஆட்சியின்போது ஊரக உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. அப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் இந்த தேர்தல் என்பது நடத்தப்படவில்லை.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற 27 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்தல் என்பது 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. இந்த 27 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் என்பது இந்த ஆண்டு இறுதியில் முடிவுக்கு வர உள்ளது.

மாறாக 2019ல் தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு 21 மாத இடைவெளிக்கு பிறகு 2021ல் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் 2019 தேர்தலில் தேர்வானவர்களின் பதவிக்காலம் என்பது வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. மாறாக 5 ஆண்டு பொறுப்பு என்ற அடிப்படையில் பார்த்தால் 2021ல் 9 மாவட்டங்களில் தேர்வான மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் என்பது 2026 தான் நிறைவு பெறுகிறது.

இதனால் இந்த காலஇடைவெளியை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அதேவேளையில் 27 மாவட்டங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய சூழலும் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் ஒரு தகவல் பரவ தொடங்கியது. அதாவது 2021ம் ஆண்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலத்தை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதன்பிறகு மொத்தமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒன்றாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

இதுதொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக 2021ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பில் தங்களின் பதவிக்காலம் முன்கூட்டியே முடிவுக்கு வருகிறதா? என்பது பற்றி கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது அதற்கு தமிழக தேர்தல் ஆணையம் பதிலளித்து விளக்கம் வழங்கி உள்ளது.

இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதில் 2021ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2026 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி வரை உள்ளது. ஆனால் அவர்களின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடைய உள்ளதா? என்று ஐயம் தெரிவிக்கம் கடிதங்கள் மாநில தேர்தல் ஆணையத்துக்கு வருகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். கிராம ஊராட்சி தலைவர்களுக்கு இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post