வருகின்ற 2029 ஆம் ஆண்டுக்கு முன்பாகவே "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பிரபல தனியார் செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில், கீழ்க்கண்ட செய்தி தொகுத்து வழங்கப்படுகிறது.
பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் "ஒரே நாடு, ஒரே தேர்தல்" வாக்குறுதியை, கடந்த மக்களவைத் தேர்தலின் போதே அமல்படுத்த படலாம் என்று சொல்லப்பட்ட நிலையில், அது தள்ளிப் போனது.
நாடு முழுவதும் இந்த "ஒரே நாடு, ஒரே தேர்தல்" முறைக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்து உள்ள நிலையில், இதுகுறித்து மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க மத்திய அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
மேலும், "ஒரே நாடு, ஒரே தேர்தல்" அமல்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு, தனது ஆய்வினை செய்து முடிவுகளை வெளியிட்டது.
அதன்படி, "ஒரே நாடு, ஒரே தேர்தல்" நடைமுறைக்கு ஆதரவாகவே இந்த உயர்மட்ட குழுவின் பரிந்துரைகள் இருந்ததாக தெரிகிறது.
அந்த உயர்மட்ட குழு பரிந்துரைகளில், அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்படுவது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த திருத்தத்தை மேற்கொள்ள மேலும் மொத்தம் 18 அரசியலமைப்பு திருத்தங்கள் செய்ய இந்த குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரைகளில் பெரும்பாலானவை மாநில சட்டமன்றங்களில் ஒப்புதல் பெற அவசியம் இல்லை என்றும், பாராளுமன்றத்தில் திருத்த மசோதா கொண்டு வந்து நிறைவேற்றினாலே போதும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சீர்திருத்தங்களை செய்த பிறகு மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தி முடிக்கவும், அதன் பின்னர் 100 நாட்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் இந்த குழு பரிந்துரை செய்துள்ளது.
மேலும் வருகின்ற 2029 ஆம் ஆண்டு தற்போதைய பாஜக ஆட்சி முடிவதற்கு முன்னதாகவே இந்த "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஒரு அந்த தனியார் செய்தி ஊடகத்தின் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
பொதுச் செய்திகள்