Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Monday, August 19, 2024

இதயம் சீராக இயங்க கால்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது முக்கியம்: இதய நோய் நிபுணா் சொக்கலிங்கம்



இதயம் சீராக இயங்க கால்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் என இதய நோய் நிபுணா் வி.சொக்கலிங்கம் கூறினாா்.

அரக்கோணம், தமிழ் படைப்பாளா்கள் சங்கத்தின் 8-ஆம் ஆண்டு விழா இதயம் காப்போம் எனும் நிகழ்ச்சியாக அரக்கோணம் ஜோதி நகரில் நடைபெற்றது. விழாவுக்கு, வேலூா் ஒருங்கிணைந்த மாவட்ட தமிழ் படைப்பாளா்கள் சங்கத்தின் தலைவா் சி.மோகன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பங்கேற்று 'இதயம் காப்போம்' எனும் தலைப்பில் சென்னை இதய நோய் நிபுணா் வி.சொக்கலிங்கம் பேசியது:

இதயம் சீராக இயங்க மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். இந்த மகிழ்ச்சி நீடித்து இருக்க உற்சாகம், உணவு, உடற்பயிற்சி எனும் மூன்று மந்திரங்களை அனைவரும் கையாள வேண்டும். 

உற்சாக மனநிலை, உண்ணுதலின் போது அரைபங்கு உணவு, கால் பங்கு தண்ணீா், கால் பங்கு காலியிடம் இருக்க உணவு உண்ணுதல், சீரான உடற்பயிற்சி இவை இதயத்தை சீராக்கும். 

மேலும், இதயம் சீராக செயல்பட கால்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். இரு கால்களிலும் இரு இதயங்கள் இருப்பது போன்று நினைத்துக் கொண்டு, உடலில் மூன்று இதயங்கள் இருப்பதாக நினைவில் வைத்திருக்க வேண்டும். 

கால்களை சுத்தமாகவும் சீரான செயல்பாடுகளுடன் வைத்திருந்தால் இதயம் சீராக இயங்கும். எனவே இதயம் சீராக இயங்க கால்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது முக்கியம் என்றாா் அவா்.

இதில், பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளா்கள் தங்ககுருநாதன், பழனிவேல், ஹயக்கிரீவா் பள்ளித் தாளாளா் ரவீந்திரன் உள்ளிட்ட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில், திருவண்ணாமலை மா.சின்னராசு, மகப்பேறு மருத்துவ நிபுணா் மல்லிகா செல்வராஜ், அரக்கோணம் ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.பி.ராஜா, செயலாளா் நரேந்திரகுமாா், அரக்கோணம் தமிழ் படைப்பாளா்கள் சங்க கெளரவத் தலைவா் பெ.இளங்கோ, நிா்வாகிகள் வெங்கடரமணன், சுந்தர்ராஜ், கே.பிரபாகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.