Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Thursday, August 22, 2024

அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக ஆக்குவது எப்போது?


குழந்தைகள் உலகம் அற்புதமானது! அவர்களை மிகக் கவனத்தோடும், அக்கறையோடும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை என்பதை உணர்ந்த அரசு, 1975-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் திட்டத்தின் கீழ் (ICDS) அங்கன்வாடி மையங்களை தொடங்கியது.

குழந்தைகள் பசியால் வாடி ஆரோக்கியம் குன்றுபவர்களாக மாறுவதைத் தடுப்பதும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதும் அங்கன்வாடி மையங்களின் முக்கியப் பணிகள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 'பால்வாடி' என்று அறியப்படும் அங்கன்வாடி மையங்கள் சற்றேறக்குறைய 59 ஆயிரம் செயல்பாட்டில் உள்ளன.

இதை நல்ல முறையில் செயல்படுத்த, சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்குப் புதிய வடிவிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதோடு அங்கன்வாடி மையங்களின் தரம் உயர்த்தப்பட்டு, நகர்ப்புறம் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் வருகை அதிகரித்துள்ளது.

முதற்கட்டமாக அங்கன்வாடி கட்டிடங்களைத் தூய்மைப்படுத்தியுள்ளனர். குழந்தைகளைக் கவரக்கூடிய வண்ணங்களால் அறையை அலங்கரித்துள்ளனர். சிறிய விளையாட்டு உபகரணங்களையும் வைத்திருக்கின்றனர்.

இருப்பினும் சில இடங்களில் போதிய பராமரிப்பின்றியும் முறையான பணியாளர்கள் இல்லாமலும் மக்களின் வரவேற்பைப் பெற முடியாமல் பாழடைந்த கட்டிடங்களிலும், வாடகைக் கட்டிடத்திலும் இயங்கி வருவதால் அப்பகுதியில் தனியார் மழலைப் பள்ளிகள் துளிர் விடுகின்றன.

ஆனாலும், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் பருவத்தினர் ஆகியோர் அங்கன்வாடி மையத்தின் மூலம் தனிக்கவனம் பெறுகிறார்கள். தொடர்ந்து குழந்தைகள் பராமரிப்பு, வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அங்கன்வாடி மையங்களில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கான நவீன விளையாட்டு உபகரணங்கள் மூலமாகவும் பாடல்கள் மூலமாகவும் மொழியை கல்வியை கற்பிப்பதோடு, ஊட்டச்சத்து வாரம் மூலம் விதவிதமான கலவை சாதங்கள், புதன், வியாழன் கிழமைகளில் முட்டை, பயறு வகைகளை வழங்கி வருகின்றனர்.

இந்தப் பணிகளை எடுத்துச் செய்யும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு என்பது எட்டாக் கனியாக இருந்து வருகிறது. தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த இவர்களுக்கு கடந்த 2009-ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் சிறப்பு கால முறை ஊதிய முறையை அமல்படுத்தினார். இதன்மூலம் இவர்களின் ஊதியம் ரூ.7,700 முதல் ரூ.24,200 வரையாக இருந்து வருகிறது.

இவர்கள் தங்களது பணிக்காலத்தைக் கணக்கிட்டு பணிக்கொடை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடிய நிலையில் உச்ச நீதிமன்றமும் இவர்களின் கோரிக்கையை பரிசீலித்து, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 மற்றும் கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 11 ஆகியவற்றின் விதிகளின் படி, அங்கன்வாடி மையங்களும் சட்டப்பூர்வ கடமைகளைச் செய்து வருவதால் இவர்களுக்கு பணிக்கொடை வழங்கவேண்டும் என்று கடந்த 2022-ம் ஆண்டில் உத்தரவிட்டது.

திமுகவின் தேர்தல் அறிக்கை: இவர்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்த நிலையில், 'சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக்குவோம்' என்ற 2021 தேர்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்திருந்தது. இதையடுத்து இதை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரச்சாரக் களத்தில் இறங்கியுள்ள அங்கன்வாடி பணியாளர்கள், இது தொடர்பாக முதல்வரை சந்திக்க முடிவெடுத்துள்ளனர்.

இதுகுறித்து அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் வேலுச்சாமி கூறுகையில், 'அரசு நிகழ்ச்சிகள் என்றால், கூட்டம் கூட்டுவதற்கு ஆள் திரட்டுவது அங்கன்வாடி பணியாளர்களே என்று இருந்தது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். பணியாளர்களுக்கு 'ஸ்மார்ட் போன்' கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 15 நாட்கள் கோடை கால விடுமுறை என்பதை சங்கத்தின் வாயிலாக தக்க வைத்துள்ளோம். இருப்பினும் குறைபாடுகளும் உள்ளன.

திமுக தேர்தல் வாக்குறுதியில் உள்ள படி, அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்ற பிரதானக் கோரிக்கையை முன்வைத்துள்ளோம். இது கிடைத்தால் மற்ற அனைத்தும் இவர்களுக்கு கிடைத்துவிடும். இவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கியது முன்னாள் முதல்வர் கருணாநிதி.

தற்போது அவரது புதல்வரே முதல்வராக உள்ளதால் அரசு ஊழியர்கள் கனவும் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்' என்கிறார். இவர்களின் நம்பிக்கை மெய்ப்பட வேண்டும்; எளிய மக்களின் குழந்தைகள் உலகைப் பேணும் அங்கன்வாடி மையங்கள் மென்மேலும் உயர்வடைய வேண்டும்.