கொரோனாவின் அடுத்த வேரியண்ட் பரவி வரும் சூழலில், தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு உலக நாடுகளை பந்தாடிய கொரோனா தொற்றை யாராலும் எளிதாக மறக்க முடியாது. 2020 மார்ச் மாதம் தொடங்கி, பல மாதங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது கொரோனா. சில மாதங்களுக்குப் பிறகு கொரோனாவின் அடுத்த வேரியண்ட் வந்து, பரவல் அதிகமானது. பெரும்பாலானோருக்கு தடுப்பூசிகள் அளிக்கப்பட்டதன் மூலம், கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
உலெகங்கும் கொரோனா தொற்று 90% குறைந்து விட்டதாக கூறப்பட்டாலும், கொரோனா தொற்று ஆங்காங்கே உருமாறி பரவி வரவே செய்கிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு, கடந்த சில நாட்களில் சுமார் ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கொரோனா தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் தமிழக முதலமைச்சரின் நடவடிக்கையால் 98 %-க்கும் அதிகமானோருக்கு 3 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே இங்கு எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.
இந்நிலையில் கொரோனாவின் உருமாற்றம் பல வகைகளில் உள்ளது. ஒமிக்ரான் வேரியண்டில் கூட பல வகைகள் உள்ளன. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சிங்கப்பூரில் பலர் உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழத்தில் பணியாற்றும் மருத்துவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினோம். இது என்ன மாதிரி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கேட்டபோது, கொரோனா பாதித்த நபர்கள் 3,4 நாட்களில் குணமடைந்துவிடுகிறார்கள். இருமல், சளி ஆகிய உபாதைகள் மட்டுமே ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் நேற்று 280 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களிடமும் புதிய வகை கொரோனா தொற்று தொடர்பாக கேட்டபோது, அதேபோன்ற பதிலையே கூறினார்கள். தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் தொடர்பாக கண்காணித்து வருகிறோம். காய்ச்சல் அதிகமாக உள்ள உடங்களில், RT - PCR சோதனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது. கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளை பகுப்பாய்வு செய்து, எந்த மாதிரியான வேரியண்ட் என்பதை கண்டயறிவோம். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் 3 ஆயிரம் இடங்களில் 8 வது மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 7 வாரங்களில் இதுவரை 16, 516 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது. அனைத்து முகாம்களிலும், 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள சிறார்களுக்கு ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 7.83 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
Tags:
பொதுச் செய்திகள்