வலி நிவாரணி மெஃப்தால் மாத்திரை... மருத்துவர் பரிந்துரையின்றி எடுக்க வேண்டாம்!


வலி நிவாரணத்துக்காக எடுத்துக் கொள்ளப்படும் மெஃப்தால் (MEFTAL) மாத்திரைகள் மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதால் மருத்துவர் அறிவுறுத்தல் இல்லாமல் அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என இந்திய மருந்தியல் ஆணையம் (Indian Pharmacopoeia Commission - IPC) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அலோபதி மருந்தான மெஃப்தால் மாத்திரை மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி, தசைப்பிடிப்பு, தசைகளில் வலி உள்ளிட்டவற்றுக்கு எடுத்துக்கொள்கின்றனர்

இதுதவிர, மூட்டுவலி, பல்வலி, முடக்குவாதம் போன்ற பிரச்னைகளுக்கான வலி நிவாரணியாகவும் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இந்த மருந்து, சந்தைகளில் MEFTAL, MEFKIND, MEFANORM, IBUCLIN P போன்ற பெயர்களில் விற்பனையாகிறது. பொதுவாக அனைத்து மருந்தகங்களிலும் எளிதாகக் கிடைக்கும் என்பதால் மருத்துவர் பரிந்துரை இல்லாமலேயே இதை விற்கவும் வாங்கவும் செய்து வருகின்றனர்.

இம்மருந்தைப் பயன்படுத்துவது குறித்து இந்திய மருந்தியல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது‌. அதில் மெஃப்தால் மருந்து தயாரிப்பில் அதிக அளவு மெஃபெனாமிக் என்ற அமிலம் சேர்க்கப்படுகிறது. இம்மருந்து உடலில் மோசமான எதிர்வினைகளை ஏற்படுத்தலாம். பகுப்பாய்வின்போது இம்மருந்தை உட்கொண்ட நபரின் உடலில் 6 முதல் 8 வாரங்களுக்கு பிறகு, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிக அளவு உற்பத்தியாகி ரத்தக் கோளாறுகள் ஏற்படுவது தெரிய வந்துள்ளது.
மேலும் மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் ஒவ்வாமையான DRESS syndrome, தோல் எரிச்சல், சொறி, காய்ச்சல், நிணநீர் பிரச்னைகள் போன்ற எதிர்வினைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் இம்மருந்தை மருத்துவர் அறிவுறுத்தலின்படி, மருத்துவர் பரிந்துரைக்கும் அளவே உட்கொள்ளவேண்டும். மருத்துவர் அறிவுத்தல் இல்லாமல் வலிக்கு இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் மெஃப்தால் மாத்திரையை ஏற்கெனவே உட்கொண்டு எதிர்வினைகள் ஏற்பட்டிருந்தாலோ, இனி இம்மருந்தை உட்கொண்டு எதிர்வினைகள் ஏற்பட்டாலோ இந்திய மருந்தியல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

அனைத்துவித அலோபதி மருந்துகளும் ஏதோவொரு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் இந்த மெஃப்தால் மருந்து மோசமான எதிர்வினையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால்தான் இந்த மருந்தை எச்சரிக்கையுடன் பயன்படுத்த ஐபிசி அறிவுருத்தியுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

Previous Post Next Post