கம்பு என்னும் சிறுதானியத்திலிருந்துதான் கம்பஞ்சோறு சமைக்கப்படுகின்றது. கம்பஞ்சோறு சமைக்க வேண்டுமாயின் அக்கம்பைச் சோறாக்குவதற்கு முன்பு புளித்த நீராகாரத்தில் உலை வைக்க வேண்டும்.
வெறுந்தண்ணீரில் உலைவைத்துச் சோறாக்கினால் அக்கம்பஞ்சோறு சுவையாக இருக்காது என்பது தமிழ் நாட்டுப் பெண்களின் சமையல் இரகசியமாகும். ஆதலால்தான் அப்பெண்கள் தங்கள் வீட்டில் நீராகாரம் இல்லை என்றாலும் சோற்றின் சுவைக்காகப் பக்கத்து வீடுகளில் நீராகாரம் வாங்கி அதில் உலைவைத்துச் சமைப்பர். இடித்த கம்பை உலையில் கொட்டி நன்றாகத் துழாவ வேண்டும். நன்கு துழாவாது விட்டால் கம்பஞ்சோறு உருண்டையாகமாறிக் கட்டிப்பட்டுவிடும்.
இவ்வாறு கட்டிவிழுந்த சோறு உண்பதற்கு நன்றாக இருக்காது. மேலும், சோறு வெந்தபின் அச்சோற்றை இளஞ்சூட்டில் வைத்துப் புழுக்க வேண்டும். புழுக்கும்போதுதான் சோறு வெண்ணெய்போல நன்றாக இருக்கும். உலைத்தண்ணீரைத் திட்டமாக வைக்க வேண்டும்.
அதிகமாக வைத்துவிட்டால் கம்பஞ்சோறு தொளதொளவென்று பாயசம் போலாகிவிடும். திட்டமாக உலைத்தண்ணீரை வைத்தால்தான் அச்சோறு வெண்ணெய்க்கட்டிபோல் நன்றாகச் சுவையாக அமையும். கிராமத்துப் பெண்கள் கம்பஞ்சோற்றை நன்றாகச் சமைப்பதற்குப் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள். நாட்டுப்புறப் பெண்ணொருத்தி மேற்கண்டவாறு கம்பஞ்சோற்றைப் பக்குவமாகச் சமைத்து அதற்கு ஏற்றவாறு குழம்பையும் தயார் செய்தாள்.
அடுத்து, தன் கணவனை அழைத்து வட்டியைக் கழுவிவைத்துக் கட்டிகட்டியாய் சோற்றைப் போட்டாள்: பொறிச்ச கூட்டுக் குழம்பைச் சிரிச்சுக்கிட்டே ஊற்றினாள். அவள் கணவனோ, உண்ண உண்ண இனிக்குது உயர்ந்த கம்மஞ்சோறு என்று கூறிக்கொண்டே உண்டானாம்.
இக்கருத்தினை விளக்கும் நாட்டுப்புறப்பாடல் வருமாறு: பொட்டுக் கம்பை இடிச்சாள் புளிச்ச நீரால் உலைவைத்தாள் இட்டு நன்றாய்த் தொளாவினாள் இளைய சூட்டில் புழுக்கினாள் வட்டியைக் கழுவி வைத்தாள் கட்டியாய்ச் சோற்றைப் போட்டாள் பொறிச்ச கூட்டுக் குழம்பைச் சிரிச்சுக் கிட்டே ஊத்தினாள்.
உண்ண உண்ண இனிக்குது உயர்ந்த கம்மஞ் சோறுதான் உண்ண உண்ண மணக்குது உயர்ந்த கம்மஞ் சோறுதான் இப்பாடற்கருத்தின்படி அக்காலத்துப் பெண்கள் கம்பஞ்சோற்றை ஆக்கினர். இக்காலத்தில் இவ்வாறு சுவையாக ஆக்குபவர் மிகச்சிலரே. எவ்வாறாயினும் கம்பு, சோளம் முதலான சிறுதானியங்களை உணவாகக் கொண்டு உடல்நலத்தை உறுதி செய்வோம்.
Tags:
உடல் நலம்