Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 20, 2023

மகாலட்சுமியின் அருள் கிட்ட ஆடி வெள்ளி வழிபாடு...

பெண்களுக்கு ஆடி வெள்ளியும், தை வெள்ளியும் மிகவும் விசேஷமான கிழமைகளாகும். அம்பிகை அருள் பொங்கும் வெள்ளிகிழமை தான் சுக்ரனுக்கும் உகந்த நாளாகும்.

அம்பிகை மற்றும் சுக்ரன் கடைக்கண் பட்டால் வீட்டில் பொன்னும் பொருளும் சேரும் என்பது நம்பிக்கை.

செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் அந்த பரந்தாமனின் பத்தினியான லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தமான வெள்ளிக்கிழமைகளில்,விரதமிருந்து திருவிளக்கு பூஜை செய்து வந்தால் நம் இல்லத்தில் மட்டுமில்லாமல் உள்ளத்திலும் நிரந்தரமாக வசித்திடுவாள்.

லட்சுமி வழிபாட்டை தொடங்கும் போது முறையாக விளக்கு ஏற்றி வைத்து குங்குமம், சந்தனம், பூ ,தேங்காய், வெற்றிலை, பாக்கு, இனிப்புப் பொருட்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பின்பு அஷ்டலட்சுமி வருகைப் பதிகம், துதிப்பாடல்கள் பாடி தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் செல்வ வளம் பெருகும்.

பொதுவாக திருமகள் எனப்படும் மகாலக்ஷ்மி எப்போதும் ஓரிடத்தில் நிலையாக இருப்பதில்லை என்றொரு வழக்கு உண்டு. இதைக் குறித்து உலகைக் காக்கும் அந்த பரந்தாமனே ஒரு முறை தாயாரிடம் கேட்க, அதற்கு அவள், "தர்மம் செய்யாத கருமிகள், மிருகங்களை வதைத்து உண்பவர்கள், சூதாடிகள், பரத்தை வீட்டுக்குப் போகிறவர்கள், குடிகாரர்களை கண்டால் எனக்கு பிடிக்காது.அதிகமாக கோபப்படுபவர்கள், பொய் சொல்பவர்கள், பொறாமைக்காரர்கள், தற்புகழ்ச்சி செய்து கொள்பவர்கள், தன்னிடம் பணம் உள்ளது என கர்வபடுகிறவர்கள், ஏழைகளை கண்டு இரக்கப்படாதவர்கள் போன்றோருக்கு எனது அருள் கிடைக்காது; ஒரு வேளை வினைப் பயனால் அது கிடைத்திருந்தாலும் அது நிலைக்காது" என்றாள்.

இதை கேட்டு மகிழ்ந்த எம்பெருமான் "இந்த அவ நடத்தைகள் இல்லாதவர்களின் வீட்டில் மகாலக்ஷ்மி கடாட்சம் எப்போதுமே இருக்கும் என்று வரமளிக்கிறேன்" என்று கூறி அருளினார்.

மங்களங்களை அள்ளித் தரும் லட்சுமி தேவி நம் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்ய வேண்டும் என்று யாருக்கு தான் ஆசை இருக்காது. ஆனால் அதற்கு பெரிய அளவில் மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லை. தினமும் நாம் கொஞ்சம் நேரம் செலவழித்தாலே போதும், அந்த அன்னை நம்மை தேடி வருவாள்.

சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.

வீட்டில் எப்போதும் சண்டை, சச்சரவோ , அமங்கலச் சொற்களோ பேசவே கூடாது.மாறாக காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

பெண்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது. மேலும் அவர்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.அதே போலபெண்கள் எப்போதும் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடவே கூடாது.

வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும் என்பது நம்பிக்கை. விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது.

மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு. விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறருக்கு கொடுக்கக் கூடாது.

வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து, அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப் பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.

வழிபாட்டிற்கு உகந்ததான ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்தால் அந்த மகாலட்சுமியின் அருள் கிட்டும். சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில், அம்பிகையை மனதில் நிறுத்தி விரதமிருந்தால் நாம் நினைத்தது நிறைவேறும்.

No comments:

Post a Comment