பிரம்மனால் படைக்கப்பட்ட அகலிகையை அடைய தேவலோகமே அல்லோகலப்பட்டது. ஆனால் முடிவில் கெளதம முனிவர் அவளை மணமுடித்துக் கொண்டார்.
இதனால் தேவலோகத்து அரசனான இந்திரனின் ஆசையும் ஆத்திரமும் அதிகரித்தது. எப்படியாவது அகலிகையை அடைய வேண்டும் என்று சபதம் பூண்டான்.
சந்திரனை ஒரு நாள் அதிகாலையில் சீக்கிரம் மறைய செய்து, பொழுது புலர்ந்து விட்டதாக ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி, கெளதம முனியை சந்தியாவந்தனம் செய்ய வீட்டை விட்டு வெளியேற்றினான்.
அவர் சென்ற பிறகு அவரைப் போலவே உருமாறி வீட்டிற்குள் சென்று, அகலிகையுடன் கூடி தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டான். பாவம் அகலிகை, அதே இந்தக் காலமாக இருந்தால் "ஸ்கூல் பஸ் ஏழு மணிக்கு வந்துடும்.. குழந்தைக்குச் சாப்பாடு ரெடி பண்ணனும், மேல இருந்து கையை எடுடா பரதேசி.." என்று சொல்லியிருப்பாள்.
ஆனால் அந்தக் காலகட்டத்தில் கணவனை எதிர்த்துக் கேள்வி கேட்டால், அவள் பத்தினி இல்லை பழைய ஊசிப் போன சட்டினி என்று கூறி விடுவார்களே. அதனால் அந்த அபலையும் வாய்மூடி ஒத்துழைக்க வேண்டியதாக இருந்தது.
இந்திரன் வெகுநேரம் திரும்பி வராததால், சந்திரன் தன் கடமையை நிறைவேற்ற மீண்டும் வானில் தோன்றினான். அதே நேரம் ஆற்றங்கரைக்குச் சென்ற கெளதம முனிவர் வானில் சந்திரனை பார்த்ததும், இன்னும் பொழுது புலரவில்லை என்பதை உணர்ந்து வீட்டிற்குத் திரும்பி வந்தார். அங்கே அவர் தர்மபத்தினி, தன்னைப் போல உருமாறிய இந்திரனுடன் இருப்பதைக் கண்டு கடும் கோபம் கொண்டார்.
கெளதம முனிவரின் கோபத்தால் இந்திரனுக்கு உடல் முழுவதும் ஆண் குறிகள் உருவாகும் சாபமும், சந்திரன் தன் கடமை தவறி சபலத்திற்குத் துணை போனதால் மாதமொரு முறை வானில் தோன்றாமல் இருக்கச் சாபமும் கிடைத்தது. பிறகு அகலிகை கல்லாகி போகும் படி சாபம் பெற்று, இராமாயணத்தில் இராம பிரானின் பாதம் பட்டு அவளுக்குச் சாப விமோசனம் கிடைத்தது.
இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். சபலப்பட்டவர் மட்டுமன்றி சபலத்திற்குத் துணைபோனவரும் தண்டிக்கப்படுவார் என்பது தான் சூட்சும விதி. இதை அந்தக் காலத்தில் வேலையின்றித் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, வெற்றிலை பாக்கை வாயில் எச்சிலுடன் சேர்த்து மென்று குதப்பி, வெள்ளைச் சுண்ணாம்பு சுவற்றில் துப்பி நாறடித்த சில நாதாரிகள், அதிபுத்திசாலித்தனமாகப் பெண்ணின் மேல் பழி வருவதைப் போலப் பழமொழியை மாற்றி விட்டார்கள். உண்மையான சொற்றொடர் கீழே குறிப்பிட்டுள்ளது தான்.
"இந்திரன் ஒப்பார் எத்தனை யோர்தாம் இழிபு உற்றார் செந்திரு ஒப்பார் எத்தனையோர்கின் திரு உண்பார்".. இதைப் படிக்காத பாமரர்களுக்குப் புரிவைக்கிறேன் பேர்வழி என்று "இந்திரன் கெட்டதும் பெண்ணாலே - சந்திரன் கெட்டதும் பெண்ணாலே" என்று எளிமையாக மாற்றி விட்டார்களாம். ஏன், அதையே "அடுத்த வீட்டு பொம்பள மேல கையை வைச்சா, கையை வைச்சவனுக்கும் அதுக்கு விளக்கு பிடிச்சவனுக்கும் செருப்படி நிச்சயம்" என்று இன்னும் எளிமையாகச் சொல்லியிருக்கலாமே.
அது சரி.. நாம் வாசிக்கும் நீதி நூல்கள் எல்லாம், ஆண்களால் உருவாக்கப்பட்டது தானே. அதனால் தான் நான்கைந்து மனைவிகளுடன் வாழ்ந்தவர்கள் எல்லாம், நீதிமான்களாக போற்றப்படுகிறார்கள்.
எப்படி எப்படி.. "இந்திரன் கெட்டதும் பெண்ணாலே சந்திரன் கெட்டதும் பெண்ணாலே"வா.. இரண்டு பேரும் கெட்டது பலமும் அதிகாரமும் இருக்கின்ற திமிரினால் மட்டுமே. அந்த அகலிகை பாவம் தானே, அவள் என்ன செய்வாள்.
"இப்போ தானே வெளிய போனீங்க.. அதுக்குள்ள திரும்பி வந்துட்டீங்களே.." என்று எதிர்த்துக் கேட்கும் உரிமை கூட அவளுக்கு இல்லாமல் செய்தது யார் குற்றம். அப்படிக் கேட்டிருந்தால் அவளும் சுதாரித்திருப்பாளோ என்னமோ? இத்தனைக்கும் பிரம்மனால் படைக்கப்பட்ட அவருடைய மகள் போன்ற பெண்ணுக்கே இந்த நிலைமை.
Tags:
பொதுச் செய்திகள்