Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Saturday, October 12, 2024

18 வயதிற்கு மேல் ஆதாருக்கு விண்ணப்பித்தால்... அமலுக்கு வரும் புது விதிமுறைகள்!


ஆதார் அட்டைகளை வழங்குவதில் புது விதிமுறைகள் இம்மாதம் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார் அட்டை வழங்கும் நடைமுறையில் அதிரடியாக பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இனி அத்தனை எளிதில் ஆதார் அட்டை வாங்கமுடியாது.

நாடு முழுவதும் ஆதார் அட்டை முக்கிய சான்றாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு மட்டுமல்லாமல் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வங்கி கணக்கு, சொத்து பதிவு செய்தல், விற்பனை, ஜிஎஸ்டி எண் வாங்குவது, தொழில் தொடங்குவது என்று அனைத்திற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இந்தியர்கள் ஆதார் மையங்களில் விண்ணப்பித்து ஆதார் அட்டையை பெற முடியும். ஆதார் மையங்களிலோ, ஆன்லைனிலோ பெயர், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப்பணிகளையும் மேற்கொள்ளலாம்.

இந்நிலையில், எந்தவிதமான முறையான ஆவணங்களும் இல்லாமல் தரகர்களின் உதவியுடன் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருப்பூரில் மாரிமுத்து என்பவர் எவ்வித ஆவணங்களும் இன்றி ஆதார் அட்டை பெற்றுத் தந்ததாக கைது செய்யப்பட்டார்.

இவர் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் வெளிநாட்டைச் சேர்ந்த 100 பேருக்கு இப்படி போலியாக மாரிமுத்து திருப்பூரில் ஆதார் அட்டை பெற்றுத் தந்துள்ளார். இது போன்ற புகார்களையடுத்து ஆதார் அட்டைப் பெறுவதில் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த புதிய நடைமுறைகளின் படி, இனி 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிதாக ஆதார் கோரி விண்ணப்பித்தால், அவர்களது மனுக்கள் ஆன்லைன் மூலம் யு.ஐ.டி.ஏ.ஐ. ஒருங்கிணைந்த மையத்திற்குச் செல்லும். ஆதார் அட்டைப் பெறுவதற்காக அவர்கள் சமர்பித்திருந்த ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவருக்கு ஆதார் அட்டை வழங்கப்படும்.


அவர்கள் சமர்பித்த ஆவனங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அது குறித்து விசாரணை நடத்த அந்தந்த பகுதி தாசில்தார் அலுவலகத்திற்கு அவர்களது மனு அனுப்பி வைக்கப்படும்.அதன் பின்னர் தாசில்தார் தலைமையில் ஆர்.ஐ., மற்றும் வி.ஏ.ஓ.க்கள் மனுவின் மீதான உண்மை தன்மையை நேரடியாக களஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும். தாசில்தார் ஒப்புதல் அளித்த பின்னரே அவர்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து ஆதார் சேவை மையத்தை சேர்ந்த அதிகாரி கூறுகையில், "இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் மற்றும் சட்டவிரோதமாக தமிழகத்தில் நுழைபவர்கள் முறைகேடாக ஆதார் அட்டை பெறுவதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிதாக ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் போது, அவர்களுக்கு பிற மாநிலங்களில் ஆதார் அட்டை உள்ளதா? இலங்கை அகதியாக வந்துள்ளாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தாசில்தார்கள் விசாரணை நடத்திய பின்னரே ஒப்புதல் அளிப்பார்கள்.

இதற்காக முதற்கட்ட ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அக்டோபர் 15ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது" என்றார்.