Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Thursday, September 26, 2024

இனி கண்கள் இல்லாமலேயே பார்வை பெற முடியும்... எலன் மஸ்க் நியூராலிங்க் நிறுவனம் உருவாக்கிய புதிய கருவி!


இந்த உலகம் எப்படி இருக்கும், நம்மை சுற்றி இருப்போர் எப்படி இருப்பர், ஏன் தன் முகம் கூட எப்படி இருக்கும் என தெரியாது பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு.

இப்படிப்பட்டவர்களின் ஏக்கத்தை தீர்க்க வந்துள்ளது எலன் மஸ்க்-கின் நிறுவனம் கண்டுபிடித்துள்ள புதிய கருவி. எப்படி இயங்கும் அது பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

மனிதனின் பெரும்பாலான குறைபாடுகளுக்கு, மூளையில் ஏற்படும் பாதிப்பே காரணமாக கூறப்படுகிறது. இதை கவனத்தில் கொண்டு உலகப் பணக்காரர் எலன் மஸ்க் உருவாக்கியது தான் நியூராலிங்க் நிறுவனம்.

BCI எனப்படும் மூளைக்கும், கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் இணைப்பை உருவாக்கும் வகையிலான 'சிப்'-ஐ மனிதனின் மூளையில் பொருத்தி, நோய்களுக்கு தீர்வு காணும் முறைதான் அது.

இதன்படி முதலில் உருவானதுதான் டெலிபதி என்ற சிப். இந்த 'சிப்', மூளையை தொடர்புகொள்ளும்படியாக மனித மண்டை ஓட்டின் உட்புறத்தில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மூலமாகப் பொருத்தப்படும். ஆயிரத்திற்கும் மேலான எலெக்ட்ரோட்ஸ்களைக் கொண்டுள்ள இந்த சிப், மூளையில் உள்ள நியூரான்களின் சமிக்ஞைகளை வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் மூலமாக, மொபைலில் பதிவிறக்கப்பட்ட 'நியூராலிங்க் செயலி'க்கு அனுப்பும்.

இந்த செயலி மூலமாக கணிணி, செல்போன் உள்ளிட்ட எந்தவொரு தொழில்நுட்பக் கருவிகளோடும் தொடர்புகொள்ள முடியும். இதன் மூலம் மூளையில் தோன்றும் எண்ணங்களை தொழில்நுட்பத்தில் செயல்படுத்த முடியும்

இந்த ஆண்டு தொடக்கத்தில் டெலிபதி சிப்- விபத்து ஒன்றில் தோள்பட்டைக்கு கீழே முற்றிலும் இயக்கத்தை இழந்த Noland Arbaugh என்ற 29 வயது இளைஞருக்கு பொருத்தப்பட்டது. இதையடுத்து அவர் தனது எண்ணங்களின் அடிப்படையில் செஸ் மற்றும் வீடியோ கேம்களை விளையாடினார்.

நியூராலிங்கின் அடுத்த முயற்சிதான் தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள் அல்லது விபத்து மற்றும் நோய் காரணமாக பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கச் செய்யும் Blindsight என்ற சிப்…

நாம் காணும் காட்சி நமது கண்களில் உள்ள லென்ஸ் வழியே உள்ளே சென்று ரெட்டினாவால் எலட்ரிக் சிக்னலாக மாற்றப்படுகிறது. மூளைக்கு கடத்தப்படும் அதில் உள்ள லட்சக்கணக்கான நியூரான்களால் காட்சியாக விரிகிறது. இவை அனைத்தையும் மூளையில் உள்ள Cortex-ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன. மனிதர்களில் பெரும்பாலான பார்வை இழப்பு என்பது கண்கள் பாதிப்பு, ரெட்டினா பாதிப்பு போன்றவைகளாலே ஏற்படுகிறது.

எலான் மஸ்க் நிறுவனத்தின் Blindsight கருவி, கண்கள் மற்றும் ரெட்டினா இல்லாமல் பார்வை தருகிறது. அதாவது நாம் பார்ப்பதற்கான அனைத்து விஷயங்களையும் கட்டுப்படுத்தும் Cortexல் ஒரு சிப்பை பொருத்தி, அதை மூளையுடன் இணைக்கிறது. பார்வை இழந்தவர் அணியும் ஒரு கண்ணாடியில் பொருத்தப்படும் கேமரா மூலம் உள்வாங்கப்படும் காட்சிகள் அனைத்தும், ஒரு மொபைல் கருவி மூலம் Cortexல் பொருத்தப்படும் சிப்-க்கு கடத்தப்பட்டு, மனித மூளை தூண்டப்பட்டு, காட்சிகளாக விரியும்.

இதன் மூலம் கண்கள் இல்லாமலேயே பார்வை பெற முடியும் என்பதை Blindsight நிரூபித்துள்ளது. எலான் மஸ்க்கின் இந்த நவீன கண்டுபிடிப்புக்கு, அமெரிக்காவின் மருந்து மற்றும் நிர்வாக அமைப்பான FDA அனுமதி அளித்துள்ளது. பரிசோதனை முறையில் உள்ள Blindsight கருவி, முழுமையான செயல்பாட்டுக்கு வரும்போது, மனிதனின் கண்டுபிடிப்புகளில் ஒரு தனித்துவமான மைல் கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.