முதுகுளத்தூர் அருகே பள்ளியில் திடீர் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ், கற்றலில் திறமையாக இருந்த மாணவர்களையும், அவர்களுக்கு கற்பித்தல் பணியை மேற்கொண்ட ஆசிரியரையும் பாராட்டினார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், 234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ், இன்று (செப்.24) காலை ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி 197-வது தொகுதியாக திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் எஸ்.பி.பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் இல்லாத வகுப்பறையில் மாணவர்களைச் சந்தித்து அவர்களின் கற்றல் பற்றி கேட்டறிந்தார்.
தொடர்ந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தைச் சுற்றி பார்வையிட்டு, அங்கு கட்டப்பட்டு வரும் புதிய சுகாதார வளாகங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு ஊக்கமளித்து, மாணவர்களின் வருகை, தேர்ச்சி விகிதம் ஆகியவை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். கூடுதல் வகுப்பறை தேவை எனும் தலைமையாசிரியரின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
பரமக்குடி தொகுதியில் சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வின்போது, பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியரைச் சந்தித்து உரையாடினார். மேலும், அங்குள்ள நேதாஜி உண்டி உறைவிடப்பள்ளி கட்டிட கட்டுமானப் பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார். முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட வளநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவர்களின் கற்றல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஈராசிரியர் பள்ளியாக செயல்படும் இப்பள்ளியில் மாணவர்களிடம் கரும்பலகையில் எழுதியுள்ள எழுத்துகளையும், எண்களையும் வாசிக்கச் சொன்னார். மாணவர்கள் அனைவரும் தன்னம்பிக்கையோடு வாசித்ததால் ஆசிரியர் தேவிக்கும், மாணவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இப்பள்ளியில் பயிலும் 41 மாணவர்களும் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தால் பயன் பெறுகின்றனர் எனும் தகவலையும் கேட்டறிந்தார் அமைச்சர். ஆசிரியர்கள் கோரிக்கையின்படி பள்ளிக்கு சுற்றுச்சுவர் எழுப்ப நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Tags:
கல்விச் செய்திகள்