Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Friday, September 27, 2024

நீரிழிவு நோய் அதிகமானால் உடலில் தோன்றும் அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் வேண்டாம்!!



உலக மக்களை பாடாய் படுத்தி வரும் வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் மிக முக்கியமானது.

இது பலரை தனது பிடியில் சிக்க வைத்துள்ளது. இதன் காரணமாக உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கின்றது. நீண்ட காலத்திற்கு கட்டுக்குள் இல்லாமல் இருந்தால், அது பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஒருவருக்கு ஒரு முறை நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதன் பிறகு, அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. எனினும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறைகள் மூலம் இதை கட்டுக்குள் வைக்கலாம்.

நீரிழிவு நோயின் ஆரம்ப நிலை

பொதுவாக, நீரிழிவு நோயின் ஆரம்ப நிலைகளில் குறிப்பிட்ட அறிகுறிகள் எதுவும் காணப்படுவதில்லை. எனினும், இது நாள்பட அதிகரிக்கும்போது, ​​உடலின் சில பாகங்களில் அறிகுறிகள் தோன்றத் தொடங்கும். உடலில் ஐந்து முக்கிய உறுப்புகளில் காணப்படும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது இந்த அறிகுறிகள் உடலில் தோன்றத் தொடங்கும்

கண் பார்வையில் பாதிப்பு

நீரிழிவு நோய் கண்களின் (Eyes)லென்ஸ் மற்றும் விழித்திரையை பாதித்து, பார்வையை மங்கலாகச் செய்யும். இரத்த சர்க்கரை அளவு அதிகமானால், கண்களில் அடிக்கடி எரியும் உணர்வு ஏற்படும். மங்கலான பார்வை, கண் எரிச்சல், கண்களின் நீர் என இவை அனைத்தும் நீரிழிவு நோயின் அறிகுறிகளாகும்.

கை கால்களில் கூச்சம்

நீரிழிவு நோயால் கைகள் (Hands) மற்றும் கால்களில் கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மை ஏற்படலாம். கூச்சம் தவிர கால் வலி ஏற்படுவதும் நீரிழிவு நோயின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. இரத்த சர்க்கரை அளவு அதிகமாவது இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இதன் காரணமாக சிறிய காயங்களும் குணமாக நேரம் எடுக்கும்.

சிறுநீரக பிரச்சனை

சிறுநீரில் நுரை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரவில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழித்தல் போன்றவை சிறுநீரக (Kidney) பிரச்சனையின் அறிகுறியாக இருக்கக்கூடும். பாதங்கள் மற்றும் கணுக்கால் வீக்கம் ஆகியவையும் சிறுநீரக பிரச்சனையின் அறிகுறிகளாக இருக்கலாம். நீரிழிவு நோய் காரணமாக அதிக வேலை செய்தாலோ, வேலையே செய்யாமல் இருந்தாலோ உடலில் சோர்வு மற்றும் பலவீனமான உணர்வு ஏற்படும்.

ஈறுகளில் இரத்தம் வருதல்

நீரிழிவு ஈறு (Gums) நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக ஈறுகளில் இரத்தப்போக்கு ஏற்படலாம். பல் வலி மற்றும் தளர்வான பற்கள் நீரிழிவு நோயின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றன.

ஆறாத காயம்

நீரிழிவு இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இதன் காரணமாக சிறிய காயங்கள் (Wounds) கூட குணமாக வெகு நேரம் எடுக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு காயம் ஏற்பட்டால் தொற்றுக்கான ஆபத்து அதிகமாகிறது.

நீரிழிவு நோயின் பிற அறிகுறிகள்

- அதிக தாகம்
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- அதிக பசி
- எடை இழப்பு
- சோர்வு, பலவீனம்
- மயக்கம்

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.