பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 3 கட்டக் கலந்தாய்வு, துணைக் கலந்தாய்வு, எஸ்சி அருந்ததியர்களுக்கான இடங்களை எஸ்சி மாணவர்களுக்கு மாற்றுவதற்கான கலந்தாய்வு வரை அனைத்தும் முடிவு பெற்ற நிலையில், மாணவர்கள் அனைவரும் கல்லூரிகளில் சேர்வதற்கான ஒதுக்கீடு ஆணைகளைப் பெற்றுவிட்டனர்.
எவ்வளவு இடங்கள் நிரம்பின, எந்த படிப்புக்கு அதிக வரவேற்பு?
இந்த நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கையில் எவ்வளவு இடங்கள் நிரம்பின, எந்த படிப்புக்கு அதிக வரவேற்பு, எந்தக் கல்லூரிகளில் எல்லாம் முழு இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன என்பது குறித்துப் பார்க்கலாம்.
இதுகுறித்து மூத்த கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறி உள்ளதாவது:
2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு, 1,79,950 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், 1,30,371 இடங்கள் நிரம்பி உள்ளன. மீதம் 49,579 இடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 72.45 சதவீத இடங்கள் நிரம்பி உள்ளன. இதுவே கடந்த ஆண்டு 71.17 சதவீத இடங்கள் நிரம்பி இருந்தன.
கடந்த சில ஆண்டுகளைக் காண்டிலும் இந்த ஆண்டு அதிகம்பேர் பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்திருக்கின்றனர். அதே நேரத்தில் சில முக்கியமான படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
மெக்கானிக்கல் பொறியியல்- 8,364 காலி இடங்கள் 49.7% மட்டுமே நிரம்பின.
சிவில்- 5,434 காலி இடங்கள், 42.8% மட்டுமே நிரம்பின.
இஇஇ- 5,906 காலி இடங்கள்58.3% மட்டுமே நிரம்பின.
வேளாண் பொறியியல் 1,391 காலி இடங்கள், 44% மட்டுமே நிரம்பின.
உயிரி மருத்துவம் 1,337 காலி இடங்கள், 68% இடங்கள் நிரம்பின.
கணினி அறிவியல் சைபர் பாதுகாப்பு 1,375 காலி இடங்கள், 69.8% இடங்கள் நிரம்பின.
கணினி அறிவியல் இயந்திர கற்றல் 1,093 காலி இடங்கள், 74% இடங்கள் நிரம்பின.
இசிஇ படிப்பில் 5,866 காலி இடங்கள் உள்ளன. 75% நிரம்பியுள்ளன.
கணினி அறிவியல் 5,529 காலி இடங்கள் உள்ள நிலையில் 83% இடங்கள் நிரம்பியுள்ளன.
தொழில்நுட்பப் படிப்புகளுக்கு அதிக வரவேற்பு
அதேநேரத்தில் AIDS எனப்படும் செயற்கை நுண்ணறிவு தரவு அறிவியல் பிரிவில் 83% இடங்கள் நிரம்பிவிட்டன. அதேபோல ஐடி பொறியியலில் 2,591 காலி இடங்கள் மட்டுமே உள்ளன. 84% இடங்கள் நிரம்பி விட்டன.
இதன்மூலம், சிவில், இஇஇ உள்ளிட்ட படிப்புகளுக்கு வரவேற்பு குறைந்திருப்பதும் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
15 கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பல்
இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்ற மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை 433 ஆகும். இதில் 15 கல்லூரிகள் அனைத்து இட ஒதுக்கீடுகளிலும் அனைத்து இடங்களையும் அனைத்து பிரிவுகளிலும் நிரப்பின. (உதாரணமாக: தொழிற்கல்வி, அரசு ஒதுக்கீடு, சிறப்பு 7.5% போன்றவை)
இந்த 15 கல்லூரிகளில் 5 கல்லூரிகள் தனியார் சுயநிதிக் கல்லூரிகள் ஆகும். 120 கல்லூரிகள் 90%க்கும் அதிகமான இடங்களை நிரப்பியுள்ளன. 298 கல்லூரிகள் 50%க்கும் அதிகமான இடங்களை நிரப்பியுள்ளன.
4 கல்லூரிகளில் 10-க்கும் குறைவான இடங்கள்
4 கல்லூரிகளில் 10க்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. அதேபோல சுமார் 80 கல்லூரிகளில் 100க்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.
Tags:
கல்விச் செய்திகள்