Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Thursday, September 5, 2024

விநாயகர் சதுர்த்தி விரதமுறையும் முழு வழிபாட்டு பலன்களும்!


விநாயகரை வழிபட வருடத்தின் எல்லா நாட்களுமே உகந்த நாள் தான் என்றாலும் சிறப்பான பலன்களைப் பெற விநாயகருக்கு உரிய சதுர்த்தி நாளில் வழிபாடு செய்வது அவசியம்.
அந்த வகையில் நாளை செப்டம்பர் 7ம் தேதி சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.



விரதம் இருக்கும் முறை :

விநாயகர் சதுர்த்தி தினத்தில் அதிகாலையில் எழுந்து உடலையும், உள்ளத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் சூரியன் உதிக்கும் முன் பால் பழம் அருந்தி, மாலை வரை விநாயகர் நினைவில் உபவாசம் இருக்கலாம்.காலை வழிபாட்டின் போதே சங்கடங்களை தீர்க்க வேண்டும் என மனதில் சங்கல்பம் செய்து வேண்டிக் கொண்டு பூஜையை தொடங்க வேண்டும்.

அதனை அடுத்து விநாயகரிடம் சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்க எந்த விதமான தடைகளும் இல்லாமல் அருள்புரிய வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். மாலை வரை பால் பழம் மட்டும் சாப்பிடலாம். அவரின் துதிகளை மனதில் பாராயணம் செய்தபடி பணிகளை தொடரலாம்.

மாலைப் பொழுதில் விநாயகருக்கு பிடித்தமான நைவேத்தியங்களை படைத்து பூஜை செய்து விரதத்தை முடித்து கொள்ளலாம். முடித்ததும் சந்திர வழிபாடு செய்வது மேலும் சிறப்பான பலன்களை தரும். அவரவர் வழக்கப்படி பூஜைகளை செய்யலாம். விநாயகரை மனதில் பிரார்த்தனை செய்து எப்படி பூஜை செய்தாலும் ஏற்றுக் கொள்வார். பூஜை நேரத்தில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட வேண்டும். திருமணத் தடை உள்ள பெண்கள் இவ்விரதத்தை கடைபிடித்தால் தடை விலகி நல்ல வரன் தேடி வந்து அமையும்.


இந்த விரதத்தை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப்பேறும், துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரியசித்தி உண்டாகும். துன்பங்கள் விலகி ஓடும். பேரும், புகழும் பெறுவார்கள். ஆரோக்கியமாக, சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

இந்த விரதத்தின்போது செய்யும் பூஜையில் விநாயகருக்கு நைவேத்தியமாக நெய், சர்க்கரை, எள் சேர்த்த கொழுக்கட்டைகளைத் தயார் செய்து படைக்கலாம். துன்பங்களில் இருந்து விடுபட அரச இலை, வில்வ இலை, வெள்ளெருக்கு, அருகம்புல், அகத்தி இலை, அரளி இவற்றில் ஏதாவது ஒன்றால் அர்ச்சனை செய்து வேண்டிக் கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.