Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Wednesday, September 11, 2024

'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின்கீழ் 70 வயதை கடந்த அனைவருக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச காப்பீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்


ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ்70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தால் 4.5 கோடி குடும்பங்களில் உள்ள 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள்.

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கும் நோக்கில் மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டு வந்தது. தற்போது சமூக - பொருளாதார நிலைகளை கடந்து 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இத்திட்டத்தின்கீழ் காப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், 'சமூக - பொருளாதார வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, நாட்டில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும், வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் இந்த காப்பீட்டு திட்டம் பொருந்தும். இத்திட்டத்தின்கீழ் ஏற்கெனவே காப்பீடு வசதி பெற்றிருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். தனியார் காப்பீட்டு திட்டங்கள், ஊழியர்களின் மாநில காப்பீட்டு திட்டங்களில் பயன்பெறும் மூத்த குடிமக்களும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் வாகனங்களை ஊக்குவிக்க.. மின்வாகன தயாரிப்பை ஊக்குவிக்க அடுத்த 2 ஆண்டுகளுக்கு பிரதமரின் 'இ-டிரைவ்' திட்டத்தின்கீழ் ரூ.10,900 கோடி நிதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 24.79 லட்சம் இருசக்கர மின் வாகனங்கள், 3.16 லட்சம் மூன்று சக்கர மின் வாகனங்கள், 14,028 மின் பேருந்துகளுக்கு இத்திட்டத்தின்கீழ் மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பை உருவாக்க ரூ.12,461 கோடி திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த 2024-25 முதல் 2028-29 நிதி ஆண்டு வரை ரூ.70,125 கோடி திட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.