Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Friday, September 6, 2024

5 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் 50% மானியம்..!!


தமிழக விவசாயிகளின் நலனுக்காக, மாநில அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இ-வாடகை செயலி, சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப்செட் நிறுவும் திட்டம், உழவர் சந்தை திட்டத்தை வலுப்படுத்தும் திட்டம் போன்ற ஏராளமான நலத்திட்டங்களை வேளாண்மை – உழவர் நலத்துறை செயல்படுத்தி வருகிறது.

இதில் விவசாயிகளால் பெரிதும் ஈர்க்கப்படுவது, பம்பு செட்டுகள் குறித்த அறிவிப்புகள்தான்.

இதற்கு காரணம், குறைந்த மின்மோட்டார் பம்பு செட்டுகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் மின் நுகர்வு அதிகமாகிவிடுவதுடன், பயிருக்கு நீர் பாய்ச்சும் நேரமும் அதிகமாகிறது. இதனால், மின்மாற்றியும் அதிக சுமை ஏற்பட்டு சேதமடைகிறது. எனவேதான், இத்திட்டத்தின் கீழ் புதிய கிணறுகளை உருவாக்கும் விவசாயிகளுக்கும், பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்பும் சிறு, குறு விவசாயிகளுக்கும் புதிதாக மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.

அதன்படி, பழைய பம்புசெட்டை மாற்றி, புதிய மின் மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிணற்றுக்கு புதிய மின் மோட்டார் வாங்குவதற்கும் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மானியம் பெறுவதற்கு விவசாயிகள் தங்களின் விவரத்தை தெரிவித்து புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்கும்போது, அதன் மொத்த தொகையில் 50% அல்லது ரூ.15,000 இவற்றில் எது குறைவோ அந்த தொகையே மானியமாக வழங்கப்படும். 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், தங்களது பழைய மின் மோட்டார் பம்புசெட்டுகளை மாற்ற விரும்பினாலும், புதிதாக கிணறு அமைத்து சொந்தமாக மின் இணைப்பு பெற்ற விவசாயிகளும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.

எனவே விவசாயிகள், தங்களுக்கு விருப்பமான 4 ஸ்டார் தரத்திற்கு குறையாமல் உள்ள மின்மோட்டாரை தேர்வு செய்து கொள்ளலாம். இதுவரை நுண்ணீர்ப் பாசன அமைப்பினை நிறுவிடாத விவசாயிகள், இத்திட்டத்தில் பயன்பெற விரும்பினால், விவசாயிகள் நேரடியாக https://mis.aed.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலும் பாசன வசதிக்கான உதவிகளை பெறலாம்.

மேலும், உழவன் செயலி மூலமாகவோ அல்லது நுண்ணீர்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். அல்லது சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் – வேளாண்மை பொறியியல் துறை அவர்களையும் அணுகலாம். இதற்கு ஆதார் அட்டை, சிறு-குறு விவசாயி சான்றிதழ், புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதி திராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராயிருப்பின் சாதிச் சான்றிதழ், சிட்டா, கிணறு விவரத்துடன் கூடிய அடங்கல், மின் இணைப்பு சான்றிதழ், புதிய மின்மோட்டார் வாங்குவதற்கான உத்தேச விலைப்பட்டியல்/ விலைப்புள்ளி போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.