

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் பார்வை குறைபாட்டை சரிசெய்ய சொட்டு மருந்து ஒன்றை இந்திய நிறுவனம் வரும் அக்டோபரில் அறிமுகப்படுத்துகிறது.
இந்த சொட்டு மருந்து உதவியால், ரீடிங் கிளாஸ் அணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் 55 வயதிற்கு உட்பட்டவர்கள் தப்ப முடியும்.
பொதுவாக பார்வைக் குறைபாடு, கிட்டப் பார்வை, தூரப் பார்வை என பிரித்து அறியப்படுகிறது. சிறு வயதில் பார்வையில் எந்த பாதிப்பும் இல்லாதவர்களுக்கு கூட 40 வயதிற்கு மேல் ஆகும்போது, அருகே உள்ள பொருட்களை பார்ப்பதற்கும், செய்தித் தாள் படிப்பதற்கும் சிரமமாகி விடும் சூழல் ஏற்படும். இதனை பிரஸ்பையோபியா (Presbyopia) என்று மருத்துவ ரீதியாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
வழக்கமாக கண்களில் இருந்து வெறும் 20 சென்டி மீட்டர் தூரத்தில் இருந்த பொருட்கள், பிரஸ்பையோபியா பாதிப்பு காரணமாக சரியாக பார்க்க முடியாமல் போகும். மேலும் 10 சென்டிமீட்டர் தூரமாக நகர்த்தினால் மட்டுமே அதாவது 30 சென்டி மீட்டர் தூரத்தில் தான் சரியாக பார்க்க முடியும் நிலை உருவாகும். இதன் காரணமாகவே, நாளேடுகள் படிப்பது, ஊசியில் நூல் கோர்ப்பது, பொருட்களின் கவரில் இருக்கும் விலைப் பட்டியலை படிப்பதில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சிக்கல் ஏற்படும்.
இதைச் சரிசெய்ய, ரீடிங் க்ளாஸ் உபயோகமே போதுமானது. ஒவ்வொருவரின் வேலை, டிஜிட்டல் திரைகளைப் பார்க்கும் நேரம், நாளிதழ் மற்றும் புத்தகம் வாசிக்கும் நேரம் போன்றவற்றைப் பொறுத்து, அவர்களுக்கு ஏற்ற வகையில் ரீடிங் க்ளாஸ் வழங்கப்படும். அதே நேரம் தூரத்தில் தெரியும் பொருட்களை பார்ப்பதில் இவர்களுக்கு சிக்கல் இருக்காது என்பதால், கண்ணாடியை நிரந்தரமாக அணிந்திருப்பதும் அசவுகரியத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக வங்கி, டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட பணிகளுக்காக செல்லும் 40 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், தங்களின் ரீடிங் க்ளாஸை மறந்து விட்டுச் சென்றால், செக் எழுதுவது, டிக்கெட் புக் செய்வது உள்ளிட்டவற்றை செய்ய வேறொருவரின் உதவியை நாட வேண்டியிருக்கும். இதுபோன்ற பாதிப்புகளை சரி செய்ய PresVu என்ற பெயரில் ஒரு சொட்டு மருந்தை Entod Pharmaceuticals என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த மருந்து வரும் அக்டோபர் முதல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக நியூஸ்18 குழுமத்திற்கு விளக்கமளித்த Entod Pharmaceuticals நிறுவனத்தின் சி.இ.ஓ. நிகில் மசூர்கர், PresVu மருந்தில் ஒரு சொட்டை கண்ணில் விட்டால், அடுத்த 15 நிமிடங்களுக்குள் பார்வைக் குறைபாடு சரியாகி அருகே இருக்கும் பொருட்களை கண்ணாடியின் உதவியின்றி பார்க்க முடியும் என்றும், இதன் வீரியம் 6 மணி நேரம் வரை நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.
அதேபோல், முதல் சொட்டு மருந்து விட்ட 3 மணி நேரத்தில் மீண்டும் ஒரு சொட்டு கண்களில் போட்டால் நாள் முழுவதும், அதன் வீரியம் நீடித்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் இதுபோன்ற சொட்டு மருந்துகள் இருந்தாலும், இந்தியாவில் இந்த வகை சொட்டு மருந்தை Entod Pharmaceuticals நிறுவனம் தான் முதல்முறையாக வரும் அக்டோபரில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக 40 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள், இந்த PresVu மருந்தை உபயோகித்து ரீடிங் க்ளாஸ் அணிய வேண்டிய பிரச்னையில் இருந்து தப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் மாதம் இந்த PresVu சொட்டு மருந்தை இந்தியாவில் சந்தைப்படுத்த அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது.