ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஜிடி கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்தம் 39,481 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது? வயது வரம்பு என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான எஸ்எஸ்சி (Staff Selection Commission) உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய பாதுகாப்பு படையில் உள்ள காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 39,481 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: மத்திய பாதுகாப்பு படையில் காவலர் ( GD-பொது பணி) 39,481 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் இந்தியா முழுவதும் பணியில் அமர்த்தப்படுவார்கள். சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், என்சிபி உள்ளிட்ட படைபிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பணியிடங்கள் குறித்த முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி: அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 23-வயதுக்கு உட்பட்டவகர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, 02.01.2002 க்கு முன்பு பிறந்தவர்களும் 01.01.2007க்கு பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?: சிப்பாய் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மாதம் ரூ.18,000 - 56,900 வரை வழங்கப்படும். இதர காவலர் பணிகளுக்கு ரூ.21,700 - 69,100-வரை வழங்கப்படும்.
தேர்வு முறை: கணிணி வழியிலாக எழுத்து தேர்வு நடைபெறும். இதில் பெறும் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றிற்கு பிறகு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கணிணி வழி தேர்வுக்கு நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும். தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளிலும் வினாத்தாள் இருக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதார்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறைக்கு இருமுறை நன்கு படித்து தெரிந்து கொண்ட பிறகு தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.https://ssc.gov.in/home/applyஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி /எஸ்.டி/பெண்கள்/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் இன்று முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க வரும் 14.10.2024. கடைசி நாள் ஆகும். தேர்வுகள் ஜனவரி -பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். தேர்வு அறிவிப்பினை படிக்கhttps://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_CTGD_2024_09_05.pdfஇந்த லிங்கை கிளிக் செய்யவும்.
Tags:
வேலைவாய்ப்பு