Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Saturday, August 31, 2024

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?


பெருமாள் கோயில்களில் பெருமாளை தரிசித்த பின் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் கொடுத்த பிறகு சடாரி எனப்படும் சடகோபத்தை பக்தர்கள் தலையில் வைத்து பின்பு எடுப்பார்கள்.

நம்மில் இக்காட்சியை காணாதவர்கள் இல்லை.

எதற்காக அந்த சடாரி வைக்கப்படுகிறது? சடாரி என்ற பெயர் எப்படி வந்தது? சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? போன்றவற்றை பற்றி பார்க்கலாம்.

சடாரி என்றால் என்ன?

சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பெற்ற கிரீடமாகும். இந்த சடாரி வைணவ கோயில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது.


சடம் ஹரி (பாதம்) ஸ்ரீ சடாரி என்று அழைக்கப்படுகிறது.

சடாரி வைக்கும் பொழுது பணிந்து புருவங்களுக்கு நடுவில் வலக்கையின் நடுவிரலை வைத்து மூக்கு மற்றும் வாயை பொத்தி, குனிந்து பெருமாளின் திருப்பாதத்தினை ஏற்றுகொள்ள வேண்டும்.

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்?

முன்பொரு சமயம் திருமால் வாமனனாக வந்து, திரிவிக்கிரமனாக வளர்ந்து, ஓங்கி உலகளந்த வேளையில் தனது வலது திருவடியால் மண்ணுலகையும், இடது திருவடியால் விண்ணுலகத்தையும் அளந்தார் என்பதை நாம் அறிவோம்.

அப்போது மண்ணுலகை அளந்த வலது திருவடியை உலகில் உள்ள அனைத்து உயிர்களின் தலையிலும் பதித்தார் திருமால். அந்த நேரத்தில் நாம் புல்லாகவோ, செடியாகவோ, எறும்பாகவோ இருந்திருப்போம்.

நம் தலைகளிலும் அவர் திருவடியைப் பதித்ததன் விளைவாகவே, மெல்ல மெல்ல அறிவு முதிர்ச்சி பெற்று இன்று மனிதர்களாகப் பிறந்துள்ளோம்.

அவ்வாறு இறைவன் நம் தலைகளில் திருவடியைப் பதித்ததன் நினைவாகவே இன்றும் கோயில்களில் இறைவனின் திருவடிகளுக்கும், திருவடி நிலைக்கும் பிரதிநிதியான சடாரியை நம் தலைகளில் வைக்கிறார்கள்.

சடாரி வைப்பதால் என்ன பலன்?

சடாரியை தலையில் வைப்பதால் நம் மனதில் உள்ள துன்பங்கள் நீங்கப் பெற்று இறைவனிடம் பக்தி கொள்ள வேண்டும், அறவழியில் நடக்க வேண்டும் என்ற நல்லெண்ணங்கள் தோன்றுகின்றன.

அதன் மூலம் ஒருவரது மனதில் உள்ள அகந்தை அகன்று,மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் குடிகொள்வதாக நம்பிக்கை. சம்பிரதாய ரீதியாக சடாரி வைக்கும் போது, குனிந்து, புருவங்களுக்கு மத்தியில், வலதுகை நடுவிரலை வைத்து, வாய் பொத்தி ஏற்றுக்கொள்வது முறையாகும். சடாரியை நம் தலையில் வைக்கும் பொழுது பேரானந்தமும் நம் மனதில் ஏற்படும்.