Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 22, 2023

நீரில் மூழ்கும் காரில் இருந்து தப்பிப்பது எப்படி? ஒவ்வொரு கார் உரிமையாளரும் இதை கட்டாயம் தெரிஞ்சு வச்சுக்கணும்

யாரும் எதிர்பார்த்திராத ஒன்றே வாகன விபத்து. இது எப்போது அரங்கேறும்?, எப்படி அரங்கேறும் என்பது யாரும் அறியாத ஒன்று.

இதை தவிர்க்க வழிகள் உண்டா என கேட்டால், 'அதிர்ஷ்டம்' என்பது இருந்தால் மட்டுமே அதை தவிர்க்க முடியும் என்பதே எங்களின் பதிலாகும்.

கை தேர்ந்த ஓட்டுநர்கள்கூட சில நேரங்களில் விபத்தால் பாதிக்கப்பட்டு விடுகின்றனர். இந்த மாதிரியான சூழலில் இருந்து தப்பிப்பது என்பது சற்றே சவாலானது. இந்த மாதிரியான சூழலிலேயே ஓர் வாகனம் வெள்ளம் அல்லது நீர் நிலைகளில் சிக்கி மூழ்க நேரிட்டால் அதில் இருந்து தப்பிப்பது எப்படி என்கிற தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

கடந்த காலங்களில் வாகனங்கள் வெள்ள நீருக்கு இடையில் தரைப்பாளத்தைக் கடக்க முயன்றபோது, அவை, வெள்ள நீருடன் அடித்துச் செல்வதை பார்த்திருப்போம். காருக்குள் இருக்கும் ஒட்டுமொத்த உசுரையும் காவு வாங்கக் கூடியதே இந்த மாதிரியான சூழல் ஆகும். ஆனால், கொஞ்சம் சிந்தித்து செயல்பட்டால் அனைவரும் ஆபத்து ஏதுமின்றி தப்பிக்க முடியும்.

இதற்கான வழிக்காட்டுதல்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம். விரைந்து வெளியேற வேண்டும். ஆனால், பதற்றமடைய கூடாது. குறிப்பாக, நீங்கள் ஓட்டுநராக இருந்தால் உங்கள் கை களை கடிகார முல் 10 மணி 20 நிமிடத்தில் இருக்கும்போது எப்படி இருக்குமோ அந்தவகையில் ஸ்டியரிங் வீலை இருக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

இதன் வாயிலாக உங்கள் கார் மிகுந்த ஆழமான பள்ளத்தில் விழுகின்றது என்றால் அது தரை அல்லது பாறை மீது மோதும்போது ஏற்படும் காயங்களை தவிர்த்துவிட முடியும். இதைத்தொடர்ந்து, கார் முழுமையாக நீருக்குள் மூழ்குவதற்கு முன்னர் காரில் இருந்து வெளியேறுவதற்கான முயற்சியில் களமிறங்க வேண்டும். இந்த நேரத்தில் அதிக பதற்றமடையக் கூடாது.

இதனால் உங்களின் பிராண வாயு விரைவில் வெளியேற நேரிடும். மேலும், வெளியேறுவதிலும் சிக்கலை ஏற்படுத்திவிடும். ஆகையால், விரைவில் வெளியேறுவது எப்படி என்பதை மட்டும் யோசிக்க வேண்டும். முதலில் நீங்கள் சீட் பெல்ட் அணிந்திருந்தால் அதை உடனே அவிழ்க்க வேண்டும். மேலும், ஜன்னல்களை திறக்க முயற்சிக்க வேண்டும்.

சில நேரங்களில் கதவுகளை திறக்க முடியாது. நீரின் அழுத்தம் காரணமாக அது தோல்வியிலேயே முடியும். ஆகையால், கதவை திறப்பதில் நேரத்தை வீணடிக்கக் கூடாது. அதற்கு பதிலாக ஜன்னல்களை திறந்து அதன் வாயிலாக வெளியேற வேண்டும். நீரில் மூழ்க தொடங்கிய கார் முழுமையாக 30 முதல் 60 வினாடிகளில் முழுமையாக மூழ்க தொடங்கிவிடும்.

அதற்குள்ளாக, ஜன்னல்களைத் திறந்து வெளியேறும் முயற்சியில் களமிறங்க வேண்டும் என்பதே எங்களின் அறிவுறுத்தல் ஆகும். அதேநேரத்தில், உங்கள் சீட் பெல்ட்டை கழட்ட முடியவில்லை என்றாலோ அல்லது ஜன்னலை திறக்க முடியவில்லை என்றாலோ உடனடியாக மாற்று வழியை கடைபிடிக்க வேண்டும். அதாவது, சீட் பெல்ட்டை அறுத்துவிட்டு வெளியேற வேண்டும்.

மேலும், ஜன்னலை திறக்க முடியவில்லை அதை நொறுக்க சற்றும் தயங்கக் கூடாது. இந்த இரண்டிற்குமான கருவி சந்தையில் மிகவும் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றை வீட்டில் ஒன்றும் காரில் ஒன்றும் என வைத்துக் கொள்ள வேண்டும். ஜன்னல் கண்ணாடியை உடைப்பதற்கான கருவி கை வசம் இல்லை எனில் இருக்கையில் உள்ள ஹெட் ரெஸ்டை பயன்படுத்தி அதை உடைக்கலாம்.

ஆனால், இவை அனைத்தையும் கார் முழுமையாக நீருக்குள் மூழ்கும் முன்னர் செய்துவிடுவதே நல்லது. ஜன்னலுக்கு பதிலாக விண்ட் ஷீல்டு அல்லது பின்னால் உள்ள கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வரவும் முயற்சிக்க வேண்டாம். அவை இரண்டும் ஜன்னல் கண்ணாடிகளைக் காட்டிலும் மிகவும் ஸ்ட்ராங்கானவை ஆகும்.

ஆகையால்தான் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. அதேவேளையில், உங்களின் கால்களால் உதைத்தும் ஜன்னல் கண்ணாடிகளை உடைக்க முயற்சிக்கலாம். கண்ணாடின் முன் பக்கம் அல்லது மையப் பகுதியில் மிக வேகமாக உதைப்பதனால் அதை சுலமாபக உடைத்தெறிய முடியும்.

ஜன்னலை உடைத்த பின்னர் முதலில் குழந்தைகள் இருந்தால் அவர்களை வெளியேற்ற வேண்டும். அவர்களைத் தொடர்ந்து, வயதானவர்கள் மற்றும் பெண்களை வெளியேற்ற வேண்டும். நீங்கள் நீந்திதான் வெளியேற வேண்டும் என்கிற சூழல் இருந்தால் உங்களுடன் சேர்ந்து வெளியேற முயற்சிப்பவர்களை கண்டறிந்து அதற்கேற்ப செயல்படவும்.

நீங்கள் வேகமாக வெளியேறும் விதமாக செய்யக் கூடிய செயல்கள் அவர்களை எந்த நிலையிலும் பாதித்துவிடக் கூடாது. ஆகையால், கால் மற்றும் கைகளை உதைக்கும்போது சற்று கவனத்துடன் உதைத்து நீந்தி வெளியேறவும். உங்களுக்கு எந்த பக்கமாக நீந்தி வெளியேற வேண்டும் என்பது தெரியவில்லை எனில், வெளிச்சம் தெரியும் திசையை நோக்கி நீந்துதவே நல்லது.

இது உங்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வழிவகுக்கும். இத்துடன் வெளியேறிய கையுடன் பிறரின் உதவியை நாடுவதே நல்லது. இதன் வாயிலாக மற்றவர்களையும், குறிப்பாக, ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்ற முடியும். இதுமட்டுமில்லைங்க, நாமும் சரி, நம்முடன் இருப்பவர்களுக்கும் சரி சில தற்காப்பு யுக்திகளைக் கற்றுக் கொடுப்பது நல்லது, அவசியமானதும் கூட.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறிப்பாக, நம்முடன் சிறுவர்கள் யாரேனும் பயணிப்பார்கள் எனில் அவர்களை எந்த மாதிரியான சூழலையும் சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக அவர்களை மாற்ற வேண்டும். அதாவது, அவர்களுக்கு சில பயிற்சிகளையும், வழிக்காட்டுதல்களையும் பயிற்றுவிக்க வேண்டும். இதன் வாயிலாக நம்முடைய உதவி இல்லாமலேயே அவர்களால் அவர்களை தற்காத்துக் கொள்ள முடியும்

No comments:

Post a Comment