அரசு விடுமுறை நாட்களில் இல்லம் தேடிக் கல்வி செயல்படுமா? தன்னார்வலர்களின் கேள்விகளும் பதில்களும்!


கொரோனா பெருந்தொற்று பொதுமுடக்கத்தால், 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இழப்புகளை சரி செய்ய தமிழ்நாடு அரசு ' இல்லம் தேடி கல்வி' திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

மாணவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே 'இல்லம் தேடிக் கல்வி' மையங்களில் கற்பித்தல் சேவை வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் இத்திட்டத்தை கீழ் தன்னார்வலர்களாக சேர்ந்து கற்றல் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தன்னார்வலர்களிடம் உள்ள பல்வேறு கேள்விகளுக்கு இல்லம் தேடிக் கல்வித் திட்ட சிறப்பு அலுவலர் இளம்பகவத் பதில் அளித்துள்ளார். இந்த கேள்வி பதில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் , 'தொடு வானம்' என்ற இதழில் வெளியானது. அதிலிலுள்ள சில கேள்வி பதில்களை இங்கே காணலாம்.

அரசு விடுமுறை நாட்களில் இல்லம் தேடி கல்வி மையங்களை நடத்தலாமா?

நடத்தத் தேவையில்லை. சில சிறப்பு நேரங்களில் மட்டும் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் குழந்தைகளுடன் விழாக்கள் நடத்த அறிவிப்பு வழங்கப்படும்.

இல்லம் தேடிக் கல்வி இயக்க மையங்களில் தொடக்கநிலைக் கல்வி மாணவர்களோடு உயர் தொடக்கநிலைக் கல்வி பயிலும் மாணவர்களையும் இணைத்து நடத்தலாமா?

இல்லம் தேடிக் கல்வி இயக்க மையங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்க நிலைக் குழந்தைகளுக்குத் தனியாகவும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள உயர் தொடக்கநிலைக் குழந்தைகளுக்குத் தனியாகவும் நடைபெறுகிறது. சில இடங்களில், சில சந்தர்ப்பங்களில் உயர் தொடக்க நிலைத் தன்னார்வலர்களோ அல்லது தொடக்கநிலைத் தன்னார்வலர்களோ இல்லை என்றால், இரண்டு விதமான குழந்தைகளும் உரிய பாடங்களைப் படிப்பதற்கு அப்படி உதவலாம்.

தவிர்க்க முடியாத மற்றும் சொந்தக் காரணங்களுக்காக இல்லம் தேடிக் கல்வி இயக்கத்திலிருந்து விலக வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்?

தன்னார்வலர்கள் சொந்தக் காரணங்களுக்காக இல்லம் தேடிக் கல்வி இயக்கத்திலிருந்து விலக வேண்டும் என்று விரும்பினால், இணைப்புப் பள்ளியின் தலைமையாசிரியர் அல்லது வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் அல்லது வட்டார ஆசிரியர் பயிற்றுநரிடம் தகவல் தெரிவித்துவிட்டு விலகிக்கொள்ளலாம்.

கருவுற்ற தன்னார்வலர்கள் மகப்பேறுக் காலம் முடித்து மீண்டும் இல்லம் தேடிக் கல்வி இயக்கத்தில் சேர முடியுமா?

கருவுற்ற தன்னார்வலர்கள் மகப்பேறுக் காலம் முடிந்து, அவர்களது உடல்நிலையானது சீர் அடைந்ததைப் பொருத்தும், அந்தக் குடியிருப்பில் புதிய தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதைப் பொருத்தும், ஒவ்வொரு நிகழ்வாகப் பரிசீலிக்கப்பட்டு இது போன்ற விஷயங்களில் முடிவு எடுக்கப்படும்.

பொதுவாக இதுபோன்ற கோரிக்கைகள் 'பாலூட்டும் தாயின் உடல்நிலை, குழந்தையின் உடல்நிலை ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும்' என்கிற மருத்துவ வழிகாட்டுதல்களையும் கவனத்தில் கொண்டே பரிசீலிக்கப்படும்

பள்ளி மேலாண்மைக் குழுவில் கல்வி ஆர்வலர்களாக இணைந்துள்ள இல்லம் தேடிக் கல்வி இயக்கத் தன்னார்வலர்கள் பணி என்ன?

தன்னார்வலர்கள் ஏற்கெனவே இல்லம் தேடிக் கல்வி இயக்கத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் இடைவெளியைப் போக்குவதற்கு உழைத்துவருகிறார்கள். இதே போன்று பள்ளியிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளியைப் போக்குவதற்கு தொடர்ந்து தங்களது சமூகப் பங்களிப்பை அந்தந்தப் பள்ளிகளுக்குத் தேவைப்படும் வகைகளில் செய்வது இவர்களின் கடமையாகும். மாணவர்களின் கற்றல் நிலை குறித்து பெற்றோரிடம் கல்வி ஆர்வலர்கள் தொடர்ந்து உரையாடி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு வீட்டில் கல்வி கற்க உகந்த சூழல்களைப் பெற்றோர் ஏற்படுத்தித் தர அறிவுறுத்த வேண்டும். அதோடு, பள்ளிக்கும் பெற்றோருக்கும் ஒரு தகவல் தொடர்புப் பாலமாகவும் இவர்கள் இருக்க வேண்டும். பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டிய தகவல்களை கல்வி ஆர்வலர்கள் விளக்கமாகத் தெரிவித்து, கற்றல் நிலை தொடர்பில் சரியான புரிதலைத் தோற்றுவிக்க வேண்டும்.
Previous Post Next Post